இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார், தனிப்படை போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த வழக்கில், மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது, காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, நேற்றைய தினம் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தற்பொழுது மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சண்முக சுந்தரம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை மதுரை தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
முன்னதாக, காவலர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரி மீதான நடவடிக்கை எங்கே? என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காட்டமாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட்டு, “சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டவரை, ஆயுதம் இல்லாத நிலையில் இவ்வாறு தாக்கியது ஏன்?” என கேள்வி எழுப்பியது.