சிதம்பரம் தீட்சிதர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா.? ஆளுநர் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி.!

ஆளுநர் என்ன ஆண்டவரா.? இது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி மக்களுக்கு நல்லது செய்வதே எங்கள் வேலை என அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த பல்வேறு கேள்விகளுக்கும், அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அவர் கூறுகையில், ஆளுநர் தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பட்டுள்ளதாக கூறுகிறார். அது கடந்த 10 ஆண்டுகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை திமுக அரசு மீட்டு வருகிறது என குறிப்பிட்டார்.
இதுவரையில் 4 ஆயிரம் கோயில் சொத்துக்கள் இந்து அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. அவற்றில் ‘இந்த இடம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்குக்கு சொந்தமான இடம்’ என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். மேலும், அதில் 6 இடங்களை பாஜகவினர் தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். கோயில் நிலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் ரவி தான் அரசியல் கடந்து தமிழக அரசுக்கு நன்றி கூற வேண்டும் என கூறினார்.
அடுத்து சிதம்பரம் தீட்சிதர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், தவறு எங்கு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும். குழந்தை திருமணம் தடுக்க தான் சட்டம் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் விவகாரத்தில் 4 புகார்கள் பெறப்பட்டன. அதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு யாருக்கும் ஆளுநர் கூறும், 2 விரல் கன்னித்தன்மை பரிசோதனை நடைபெறவில்லை. சிதம்பரம் தீட்சிதர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா.? எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஆளுநர் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் கூறுகையில், ஆளுநர் என்ன ஆண்டவரா? இது மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சி மக்களுக்கு நல்லது செய்வே நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம். என கூறிவிட்டு, ஆளுநர் தான் காலாவதி ஆகுவார். திராவிட மாடல் காலாவதி ஆகாது என பேசிவிட்டு சென்றார் அமைச்சர் சேகர்பாபு.