உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் – தேசிய பேரிடர் மீட்பு படை அதிர்ச்சி தகவல்..

உருக்குலைந்த ரயில் பெட்டியின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி சவாலாக உள்ளது என தேசிய பேரிடர் மீட்பு படை தகவல்.
ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் விபத்தை தொடர்ந்து, நேற்று இரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தேசிய பேரிடர் குழு, மாநில பேரிடர் குழு மற்றும் ராணுவ குழுக்கள் என கிட்டத்தட்ட 15 நேரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், பயணிகள் மீட்பு பணிகள் நிறைவடைத்துள்ளதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
ரயில் விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 900க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்ற அபாயம் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
உருக்குலைந்த ரயில் பெட்டியின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி சவாலாக உள்ளது. விபத்தில் சிக்கிய 17 ரயில் பெட்டிகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளன. தேசிய மீட்பு படையை சேர்ந்த 9 குழுக்கள், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று என்.டி.ஆர்.எஃப் ஐஜி நரேந்திர சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் நிறைவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.