“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

MK STALIN - T N GOVT

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவ மாணவிகளும், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ மாணவிகளும், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 சிறுபான்மையினர் நல விடுதிகளில் 1.250 மாணவ மாணவிகளும் தங்கிப் பயின்று வருகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 98.909 மாணவ மாணவியர்களும், 48 பழங்குடியினர் விடுதிகளில் 2,190 மாணவ மாணவியர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர். இவ்வாறு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் – சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை உறுதிப்படுத்தும் தமிழக அரசின் நீண்டகால மரபை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. மேலும், இந்த அறிவிப்பு, சமூகநீதியை மையமாகக் கொண்டு, ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்