அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் இந்தக் கோவிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 1ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. விழாவிற்காக 8,000 சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு 12 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.
கடலில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீர், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி பாராயணத்துடன் யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, சண்முக விலாச மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சரியாக, காலை 6.15 மணி முதல் 6:50 மணிக்குள் ராஜகோபுரத்தின் 9 கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க அனைத்து கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது, மேலும் பக்தர்களுக்கு ட்ரோன்கள் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.
அலைகடலென திரண்ட பக்தர்கள்
குடமுழுக்கு விழாவையொட்டி இன்று (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இதனையொட்டி நேற்று இரவே வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவில்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் பக்தர்களின் அலைகளால் காட்சியளிக்கின்றன.
பிரம்மாண்ட ஏற்பாடுகள்
HCL நிறுவனம் (ரூ.200 கோடி) மற்றும் இந்து சமய அறநிலையத்துறை (ரூ.100 கோடி) ஆகியவற்றின் நிதியில் மொத்தம் ரூ.300 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்கள் நெருக்கடியின்றி விழாவைக் காண, கடற்கரையில் தடுப்பு வேலிகள், மின் விளக்குகள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 70 இடங்களில் LED திரைகள் அமைக்கப்பட்டன. மேலும், புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்க டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கண்காணிப்பு தீவிரம்
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவை 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது. 6 ஆயிரம் போலீசார், 30 காவல் உதவி மையங்களை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 1,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன்கள் வாயிலாகவும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.