ஒடிசா ரயில் விபத்து நடந்தது எப்படி? – வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என தகவல்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த 650 பயணிகள் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் நேற்று இரவு முதல் நடைபெற்று வந்த பயணிகள் மீட்புப் பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. உருக்குலைந்த ரயில் பெட்டியின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி சவாலாக உள்ளது என்றும் இன்று மாலைக்குள் மீட்பு பணி நிறைவடைய உள்ளது எனவும் தேசிய பேரிடர் படை கூறியிருந்தது.

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். மேலும், ஒடிசா மூன்று ரயில் விபத்து குறித்து தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (சிஆர்எஸ்) விசாரணை நடத்துவார் எனவும் தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு முதன்மை காரணமாக இருக்கும் என 4 பேர் கொண்ட ரயில்வே உயரதிகாரிகள் நடத்திய கூட்டு விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக அதனை ரத்து செய்ததால் விபரீதத்தில் முடிந்துள்ளது. சிக்னல் ஏன் கொடுக்கப்பட்டது, பிறகு ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. இதனால், மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பச்சை சிக்னல் ரத்து செய்யப்பட்டதால், லூப் லைனில் சென்று, சரக்கு ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது
லூப் லைன் என்பது எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கு வழி விடுவதற்காக சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வழித்தடமாகும். லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதால் பெட்டிகள் தடம் புரண்டன. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 21 பெட்டிகளும் தடம் புரண்டதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

130 கிமீ வேகத்தில் வந்து மோதிய கோரமண்டல் எக்ஸ்பிரஸின் என்ஜின் சரக்கு ரயில் மீது ஏறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 3 பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது விழுந்தன. அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது விழுந்து கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் மீது எதிரே சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதியுள்ளது.
ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி பெட்டிகள் மட்டும் மோதியதால் அந்த ரயிலில் பெரும் சேதம் ஏற்படவில்லை. 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸில் 3 பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டதால் அதில் சேதம் குறைவு எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிவேகத்தில் வந்து மோதியதால் அந்த ரயிலில் பயணித்தவர்கள் உயிரிழந்தனர்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநரின் தவறால் விபத்து நடந்ததா எனவும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்த உள்ள விசாரணையில் விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றுள்ளனர். இந்தியாவில் இதுவரை நடந்த ரயில் விபத்துகளில் கோரமான விபத்தாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது. 1981- க்கு பிறகு நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது.

இதனிடையே, கோரமண்டல் ரயிலில் “KAVACH” எனும் தொழில்நுட்ப அமைப்பு பொறுத்தப்படாததால் விபத்து நடந்ததா என கேள்விகள் எழுந்துள்ளது. ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்ததால், அவை மோதாமல் தடுக்க “KAVACH” என்றும் தொழில்நுட்பம் அமைப்பு பயன்படும். ரயில்வே பாதுகாப்புக்கென 3 நிறுவனங்களின் உதவியோடு உள்நாட்டிலேயே “KAVACH” தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. மோசமான வானிலை காலங்களிலும் இந்த தொழில்நுட்பம் உதவியாகும் இருக்கும். எனவே, “KAVACH” தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறுகையில், விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளை தவிர்க்க காவச் என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்படவில்லை என்றும் ரயில்களின் வருகை உள்ளிட்ட தகவல்களை முன்கூட்டியே தரும் பாதுகாப்பு அம்சமான காவச் என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையே அமைக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.