#TrainAccident: மோதிய ரயிலில் இருந்து 200-300 பேரை மீட்டோம்..! விபத்தை நேரில் பார்த்த சாட்சி..

ஒடிசா ரயில் விபத்தில் இருந்து சுமார் 200-300 பேரை மீட்ட்டுள்ளதாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களில் 650 பயணிகள் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்பு பணி முடிந்து சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரயில்கள் விபத்துக்குள்ளானதை நேரில் பார்த்த பாலசோரில் வசிக்கும் ஒருவர், “விபத்து நடந்தபோது நான் அருகிலுள்ள சந்தையில் இருந்தேன். நாங்கள் உடனடியாக விரைந்து சென்று சுமார் 200-300 பேரைக் காப்பாற்றினோம். உள்ளூர்வாசிகள் காயமடைந்த நபர்களை பைக்குகள்/ஆட்டோக்களில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர் என்று கூறியுள்ளார்.