ஒடிசா ரயில் விபத்திற்கு இதுதான் காரணம்..! சிபிஐ முதற்கட்ட தகவல்..!

ஒடிசா ரயில் விபத்திற்கு இண்டர்லாக்கிங் அமைப்பு அணைக்கப்பட்டிருந்ததே காரணம் என்று சிபிஐ முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலர் வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியானது. மேலும், உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணப்படாமலும் இருக்கிறது.
இந்த விபத்துக்குறித்து பலவித சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிஐ ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையத்தில் 10 பேர் அடங்கிய குழு தங்கள் விசாரணையை தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக சிபிஐ விபத்து நடந்த பகுதி மற்றும் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், தற்பொழுது ஒரு அதிர்ச்சி தகவல் சிபிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. அதன்படி, ஒடிசா ரயில் விபத்து நேரிட்ட இடத்தின் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் இண்டர்லாக்கிங் அமைப்பு அணைக்கப்பட்டு இருந்துள்ளது.
கணினி மூலம் இயங்கும் இந்த இண்டர்லாக்கிங் அமைப்பை, பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நிலைய அதிகாரி அணைத்துவிட்டு, கிரீன் சிக்னல் கொடுத்ததால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ தரப்பிலிருந்து முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, ரயில் நிலையத்தில் உள்ள உபகரணங்கள், பதிவு அறை மற்றும் ரிலே இன்டர்லாக்கிங் அமைப்பிற்கு சீல் வைத்துள்ளது என்றும் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு பயணிகள் அல்லது சரக்கு ரயிலும் நிலையத்தில் நிற்காது என்றும் தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை பிஆர்ஓ ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.