”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!
’மாமன்’ திரைப்படம் வெற்றி அடைய வேண்டி, மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய படங்கள் இன்று வெளியானது. காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக உருவெடுத்து வெற்றி கண்டுவரும் 3 நடிகர்களின் படமும் ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது.
மேலும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு மோதலும் இன்று உருவாகியுள்ளது. அதேநேரம், ஹாரர், காமெடி, எமோஷன் என ஒவ்வொன்றும் ஒரு ரகமாக உள்ளது. இதில், மாமன் திரைப்படம் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம். மாமன்-மருமகன் உறவு, உடன்பிறப்பு பாசம், கணவன்-மனைவி ஒற்றுமை ஆகியவற்றை அழகாக சித்தரிக்கிறது. நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் படத்தை எடுத்து காட்டுகிறது.
சூரயின் மாமன் படம் வெற்றி பெற வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவிலில் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்துள்ளனர். இதுகுறித்து ரசிகர் ஒருவர் பேசும்போது, மண்ணின் மைந்தன் சூரியின் படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என தெரிவித்து, “படத்தை எப்போ பாக்க போறோம்னு ரொம்ப ஆவலா இருக்கு’ என்றும் கூறினார்.
இந்த நிலையில், மாமன் படம் வெற்றி அடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள் தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும்.
அதை விட்டு விட்டு மண் சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்” என்று மிகவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.