செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை..! சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்..!

செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 21ம் தேதி அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு, நேற்று காவேரி மருத்துவமனையில் நான்காவது மாடியில் உள்ள சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை வாதங்களுக்காக விசாரணையை வரும் ஜூன் 27ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எனவே, வருங்காலத்தில் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறும் அவர்கள் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.