பந்துவீச்சில் மிரட்டிய கோவை..திணறிய திண்டுக்கல்..! 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய DGD vs LKK போட்டியில், கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 16வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 83 ரன்களும், முகிலேஷ் 34 ரன்களும் குவித்தனர். இதன்பின், 207 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அவருடன் களமிறங்கிய சிவம் சிங் பொறுப்பாக விளையாடினார். அவரைத்தொடர்ந்து, பாபா இந்திரஜித் (1 ரன்கள்), ஆதித்ய கணேஷ் இருவரும் பெரிதும் ரன்கள் எடுக்காமல் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
பிறகு பூபதி குமார் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய சிவம் சிங் அரைசதம் கடந்தார். அஸ்வின் 5 ரன்கள் எடுத்து வெளியேற, சரத் குமார் அணிக்கு ரன்கள் சேர்த்தார். அதன்பின் களமிறங்கிய திண்டுக்கல் அணி வீரர்கள் பெரிதும் சோபிக்காமல் ஆட்டமிழந்து களத்தைவிட்டு வெளியேறினர்.
முடிவில் திண்டுக்கல் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சிவம் சிங் 61 ரன்களும், சரத் குமார்36 ரன்களும் குவித்துள்ளனர்.
கோவை அணியில் தாமரை கண்ணன் 3 விக்கெட்டுகளும், மணிமாறன் சித்தார்த் மற்றும் ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த போட்டியின் சிறந்த வீரராக சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.