கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகல்..!

கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவை உலகின் மிகப்பெரிய விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் சந்தைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது. இந்த போரில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் பல சேதங்கள் ஏற்பட்டன. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது.
அதிலும் குறிப்பாக, உக்ரைன் துறைமுகங்கள் கைப்பற்றப்பட்டதால் ஏற்றுமதி தடைபட்டு உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தது. இதனால், துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு, உணவு பொருள்களை கருங்கடல் பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை உருவாக்கியது.
இந்த கருங்கடல் ஒப்பந்தம் உக்ரேனிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்கள் தாக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அளித்தது. இதனால் உணவு பொருட்களின் ஏற்றுமதி எளிதாக மாறியது. இந்நிலையில், கருங்கடல் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதன்படி, உக்ரைனில் இருந்து ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு தானியங்கள் செல்ல அனுமதிக்கும் கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
மேலும், தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்வதில் தடைகள் உள்ளன என்று ரஷ்யா நீண்ட காலமாக புகார் அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அது செயல்படுத்தப்பட்டால், ரஷ்யா உடனடியாக ஒப்பந்தத்தை செயல்படுத்தும் என்று பெஸ்கோவ் கூறினார்.