கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே அமித்ஷா பேச்சு!

எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையே கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் அமித்ஷா.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி உடனடியாக விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மணிப்பூர் கலவரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையே மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் கலவரம் தொடர்பான விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறது. இந்த முக்கியமான விஷயம் குறித்து விவாதம் நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.
மேலும், கூட்டுறவுத்துறையின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு விளக்கமளித்தும் பேசி வந்தார். அப்போது, அனைத்து அலுவலர்களையும் ஒத்திவைத்து மணிப்பூர் பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டது. இதனால் 4வது நாளாக இன்று இரு அவைகளும் முடங்கியது.