ட்விட்டர் எக்ஸ் என பெயர் மாற்றம்; புதிய சிக்கலில் எலான் மஸ்க்.!

எக்ஸ் என்ற பெயரில் ட்விட்டர் மாற்றப்பட்டதை அடுத்து, அந்நிறுவனம் புதிய சட்டசிக்கலுக்கு உள்ளாகும் என தகவல்.
எக்ஸ் X என்ற எழுத்திற்காக மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை வைத்துள்ளதால், ட்விட்டர் நிறுவனம் எக்ஸ் என புதிதாக பெயர் மாற்றம் செய்துள்ளதால், எலான் மஸ்க் புதிய சட்ட சிக்கலை எதிர்கொள்ளக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2003 முதல், எக்ஸ்பாக்ஸ் (Xbox) வீடியோ-கேம் சிஸ்டம் பற்றிய தகவல்தொடர்புகள் தொடர்பான X வர்த்தக முத்திரையை தன்வசம் வைத்துள்ளது.
X போன்ற மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்காக, ட்விட்டர் என முன்னர் அறியப்பட்ட நிறுவனம் எதிர்காலத்தில் அதன் X பிராண்டைப் பாதுகாப்பதில் சொந்த சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் மீது யாரோ ஒருவர் கண்டிப்பாக வழக்குத் தொடர 100% வாய்ப்பு உள்ளது, என்று பிரபல வழக்கறிஞர் ஜோஷ் கெர்பென் கூறினார், அவர் இது குறித்து கூறும்போது 900 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் X என்ற எழுத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் பெயரை, மெட்டா என மாற்றிய போது அறிவுசார் சொத்துரிமை சவால்களை சந்தித்தது. முதலீட்டு நிறுவனமான மெட்டாகேபிட்டல் மற்றும் மெய்நிகர்-ரியாலிட்டி நிறுவனமான MetaX ஆகியவற்றால் கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மீது வர்த்தக முத்திரை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.