திரை மறைவில் சந்தித்தவர்கள் இன்று பொது வெளியில் சந்திக்கின்றனர்.. ஜெயக்குமார் பேட்டி!

கோடநாடு கொலை – கொள்ளை வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டார். இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுக ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஓபிஎஸ், கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு குறித்து அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோடநாடு கொள்ளை – கொலை நடத்திய கூட்டத்திற்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும் என வலியுத்தினார். இதுபோன்று, டிடிவி தினகரன் பேசுகையில், அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள்.
இங்கே கூடியிருக்கும் கூட்டம் தானாக கூடிய கூட்டம். ஈபிஎஸ்-யிடம் இருப்பது குண்டர் படை, டெண்டர் படை. தற்போது நாங்கள் இருவரும் இணைந்திருப்பது சுயநலத்திற்காக அல்ல. எங்களது ஒரே எண்ணம் அதிமுக கட்சி மற்றும் சின்னதை துரோகத்தால் அபகரித்ததை மீட்டு தொண்டர்களிடம் கொடுக்க வேண்டும் என்பதே என தெரிவித்து, கோடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிவக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் சந்தர்ப்பவாதி, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தர்ம யுத்தம் தொடங்கியவர் மீண்டும் அவர்களிடம் சேர்ந்துள்ளார். திரை மறைவில் சந்தித்து வந்த டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இன்று பொது வெளியில் சந்திக்கின்றனர். டிடிவி தினகரனை மாயமான், 420 என விமர்சித்த ஓபிஎஸ் இன்று கைகோர்த்துள்ளார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரு நாடகத்தை அரங்கேற்ற கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். கோடநாடு வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்கோரி ஓபிஎஸ் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒரு நாடகம். அதிமுகவை சொந்தம் கொண்டாடி வரும் ஓ.பி.எஸ். மற்றும் டிடிவி தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா பற்றி பேச ஒபிஸ்க்கு தகுதி இல்லை. கோடநாடு பங்களா யாருக்கு சொந்தம் என்பது ஓ.பி.எஸ்.க்கு நன்றாக தெரியும் என்றார்.
மேலும், கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு திமுகவை சேர்ந்தவர்கள் ஜாமீன் வாங்கி கொடுத்தனர் என குற்றசாட்டினார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் திமுகவின் செல்ல பிள்ளைகள். எங்களுக்கு எந்த வித பயமும் இல்லை, எந்த முயற்சியாலும் அதிமுகவை உடைக்க முடியாது.
கோடநாடு வழக்கை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்?, இந்த வழக்கு விசாரணை குறைந்த பதவியில் உள்ள அதிகாரி தலைமையில் மாற்றப்பட்டது ஏன்?, ஐஜி தலைமையில் 90% விசாரணை முடிந்த நிலையில், ஏஎஸ்பியிடம் வழக்கு மாற்றப்பட்டது ஏன்? என பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். மேலும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்பதற்காக தான் இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஈபிஎஸ் கேட்டார் எனவும் குறிப்பிட்டார்.