மியான்மரின் முன்னாள் தலைவர் சூகிக்கு 5 குற்றங்களில் மன்னிப்பு வழங்கியது இராணுவ ஆட்சிக்குழு..!

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 19 குற்றங்களில், ஐந்து குற்ற வழக்குகளில் இராணுவ ஆட்சிக் குழு மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும், அவர் வீட்டுக் காவலில் இருப்பார் எனவும் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மியான்மர் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு விடுமுறை அல்லது சிறப்பு புத்த தினங்களை நினைவுகூருவதற்கு அடிக்கடி மன்னிப்பு வழங்குகிறது. அதன்படி, பௌத்த தவக்காலத்தை முன்னிட்டு 7,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்கான பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு ஜனநாயகத்திற்காக பிரச்சாரம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இவர், கடந்த வாரம் தலைநகர் நய்பிடாவில் சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது இன்னும் 14 வழக்குகள் உள்ளன. எனவே, அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், 2021 இராணுவ சதிப்புரட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து தடுப்புக்காவலில் இருந்த சூகி, ஊழல், சட்டவிரோத வாக்கி டாக்கிகளை வைத்திருந்தது மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.