அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்டனம்!

MRK Panneerselvam

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?. என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார். அதுவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கேட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி. விவகாரத்தைப் பொறுத்தவரை, உழவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதாக இருக்கட்டும், உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக இருக்கட்டும், அனைத்திலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆணித்தரமாக குரல் எழுப்பியது திமுக தான். இப்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, என்.எல்.சி. நிர்வாகத்துடன், மத்திய அமைச்சர்களுடன் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இழப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கொடுக்க வைத்ததும் திமுக அரசு தான்.

இன்னும் கூட, உழவர்களின் உரிமைகளுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று அந்த மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் முன்னின்று, உழவர்களுடன் அவர்களின் நலன்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி, இந்த அரசின் நடவடிக்கைகள் மீதும், எங்கள் தலைவரான முதலமைச்சர் மீதும் உழவர்கள், இளைஞர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திரு. அன்புமணி ராமதாஸ் போராட்டம் என்ற பெயரில் போலீசார் மீது கல்வீசி, பொதுச் சொத்துகளை வழக்கம் போல் சேதப்படுத்தி, அமைதியாக இருக்கும் உழவர்களை – மக்களைத் தூண்டிவிட்டு இந்த அரசுக்கு எதிராக ஒரு சதித் திட்டத்தை உருவாக்கி வருகிறார்.

மத்திய அமைச்சர் கைவிரித்தும் அதுபற்றி கேள்வி எழுப்பாமல் அமைதியாகி விட்டார் அன்புமணி. இங்கே “மண்ணையும், மக்களையும் காப்போம்” என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, “என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர், அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள “டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணியின்” அமைச்சர் அறிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்? தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும் – போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

என்எல்சி விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அறிவித்தும், அன்புமணியின் மவுனம் ஏன்?, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை என்று கூறிவிட்டு சென்னை வந்திருக்க வேண்டாமா?. அப்படியெல்லாம் அன்புமணி ராமதாஸ் அவசரப்படமாட்டார் என்று எங்களுக்கு தெரியும். ஏனென்றால் அப்படி அவசரப்பட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வந்து தன் வீட்டுக் கதவை தட்டும் என்பது அவருக்குத் தெரியும் எனவும் அமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்