ஆகஸ்ட் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ‘நோ ஹான்கிங் டே’ அனுசரிக்கப்படும்..! மும்பை போக்குவரத்து போலீசார்..!

மும்பையில் தேவையில்லாத ஹார்ன் சத்தத்தை குறைக்கும் வகையில் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் ‘நோ ஹான்கிங் டே’ கடைபிடிக்கப்படும் என மும்பை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிவித்த மும்பை காவல்துறை, தேவையில்லாமல் சத்தமிடுவதால் சுற்றுச்சூழலில் ஒலி மாசு ஏற்படுவதோடு, மனித ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் ஒலி எழுப்புவதைத் தடுக்கும் வகையில், ‘நோ ஹான்கிங் டே’ கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, வாகனங்களின் ஹார்ன்கள் மற்றும் சைலன்சர்கள் சரியாக உள்ளதா என்பதை வாகன ஓட்டிகள் உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படைகள் மற்றும் பிற வாகனங்களைத் தவிர, மும்பை நகரத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர்கள் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16 தேதிகளில் தங்கள் வாகனத்தின் ஹார்ன்களை ஒலிக்க வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேவையில்லாமல் சத்தமிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களின் சைலன்சர்கள் அல்லது எக்ஸாஸ்ட் பைப்புகளை மாற்றியமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்.