மணிப்பூர் விவகாரம் : நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடக்கம்.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் , நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்
இதன் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற்று, நாளை மறுநாள் பிரதமர் மோடி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விளக்கம் அளிப்பார். அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.
இந்நிலையில் , தற்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது துவங்கியுளளது. அதில், காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய் கூறுகையில், மணிப்பூரில் தனது இரட்டை என்ஜின் அரசாங்கமும், தனது அரசும் தோல்வியடைந்ததை பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதனால்தான், மணிப்பூரில் 150 பேர் இறந்தனர், சுமார் 5000 வீடுகள் எரிக்கப்பட்டன, சுமார் 60,000 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர், சுமார் 6500 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைதி, நல்லிணக்கம் போன்ற பேச்சு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய மாநில முதல்வர், கடந்த 2-3 நாட்களில் சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்கும் நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டார். என பேசினார்.
மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இது எண்களைப் பற்றியது அல்ல, ஆனால் மணிப்பூருக்கான நீதியைப் பற்றியது. இந்த சபை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கிறேன். இந்தியா கூட்டணி மணிப்பூருக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. மணிப்பூர் நீதியை விரும்புகிறது என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய் உரையாற்றினார்.
அதன் பிறகு பேசிய மத்திய விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத ஜோஷி, ‘ மணிப்பூர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி ஏன் இதுவரை பேசவில்லை. என பேசினார் . நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இவ்வாறு தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது.