11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!
தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மதியம் 2 மணிக்கு மேல் இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால், தேர்வு முடிவுகளை பிற்பகல் 2 மணி முதல் www.tnresults.nic.in, http://results.digilock-er.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்.
11-ம் வகுப்பில் 92.09% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆம், மாணவர்களைவிட 6.43% மாணவியர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவிகள் 95.13% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர், மாணவர்கள் 88.70% பேர் தேர்ச்சியாகியுள்ளனர். அதன்படி, 11-ம் வகுப்பு தேர்வில், 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டை விட இந்தாண்டில் 0.92% அதிகம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களின் பட்டியலில், 97.76% பெற்று அரியலூர் முதலிடம் பிடித்துள்ளது.
96.97% தேர்ச்சியுடன் ஈரோடு 2-ம் இடத்திலும், 96.23% தேர்ச்சியுடன் விருதுநகர் 3-ம் இடத்திலும் உள்ளது. அதேபோல், 95.77% தேர்ச்சியுடன் கோயம்புத்தூர் 4-ம் இடத்தையும், 95.07% தேர்ச்சியுடன் தூத்துக்குடி 5-ம் இடத்தையும் பிடித்துள்ளன.