விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!
ஓய்வு அறிவிப்பதற்கு முன்னதாக கோலி தன்னிடம் பேசியதை இந்திய அணியின் முன்னாள் கோச் ரவி சாஸ்திரி உறுதி செய்துள்ளார்.

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வந்த இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாக முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஐசிசி ரிவியூவின் நேர்காணலில் பேசிய இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அவரிடம் பேசினேன். ‘கிரிக்கெட்டுகாக அனைத்தையும் கொடுத்துவிட்டேன்’ என ஓய்வில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார்.
விராட் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கலாம். ஆனால் விராட் மனதளவில் வேறு நிலையில் இருந்தார். ஆனால், அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. ஓரிரு கேள்விகளை மட்டும் எழுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் மிகத் தெளிவாக விளக்கமளித்தார். அப்போதுதான் ‘இதுதான் சரியான நேரம்’ என எனக்கும் தோன்றியது” என்று விராட் கூறியதாக கூறினார்.
விராட் கோலி 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 123 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளார். 68 டெஸ்ட் மேட்சுகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் அதில் 40-ல் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். 46.85 பேட்டிங் சராசரி உடன் 9,230 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே எடுத்துள்ளார் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.