பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.!
ஒருமாத காலம் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21, 2025) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 17 முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன, இதில் வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், மற்றும் கப்பல் துறைகள் தொடர்பான மசோதாக்கள் அடங்கும்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு, பல்வேறு பிரச்னைகளை எழுப்ப ஆலோசனை நடத்தி வருகின்றன.
குறிப்பாக, பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் விளக்கமளிக்கவும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யும் பொழுது, கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
மேலும், நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு வஞ்சகம், கீழடி அறிக்கையை வெளியிட மறுப்பு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக விவாதிக்க வலியுறுத்தவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் எடுக்கப்படும் முடிவுகள் அடுத்த ஒரு ஆண்டுக்கான அரசின் திசையை தீர்மானிக்கும். மேலும், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் விவாதங்கள் அரசின் செயல்பாடுகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.