”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!
மே 8,9 ஆம் தேதிகளில் நாம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பாகிஸ்தானை சரணடையச் செய்தது என பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார்.

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது, இந்த விவகாரத்தில் டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர், நாடாளுமன்றத்தில் சொல்வாரா? என ராகுல் காந்தி கூறியதற்கு, ” மக்களவையில் அவரது பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கையில், ”ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு 22 நிமிடங்களில் பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தானுக்குள் ஆழமாக சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினோம். ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்படவில்லை, இன்னும் தொடர்கிறது, குண்டுகளுக்கு குண்டுகளால்தான் பதிலடி வழங்கப்படும்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் காங்கிரஸின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை. 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தான் பக்கம் நின்றன. பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை தடுக்க முடியாது.
அமெரிக்க துணை அதிபர் என்னை அழைத்து மிகப்பெரிய தாக்குதலை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக கூறினார். பாகிஸ்தான் அப்படி தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என நான் கூறியிருந்தேன். உலகின் எந்த தலைவரும் இந்த தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. போரை தீவிரப்படுத்த விரும்பாததால் தாக்குதலை நாம் நிறுத்தினோம்.
பாகிஸ்தான் அணுகுண்டு மிரட்டல் விடுத்தது ஆனால் அதற்கு அஞ்சாமல் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது பயங்கரவாதிகளை அவர்களது மண்ணிற்கு சென்று அழித்தோம். பாகிஸ்தானின் விமானப் படை தளங்களை குறிவைத்து தாக்கி அழித்தோம். ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தான் ராணுவ தளபதி தாக்குதலை நிறுத்துமாறு தொலைபேசி வாயிலாக கெஞ்சினார். மே 8,9 ஆம் தேதிகளில் நாம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பாகிஸ்தானை சரணடையச் செய்தது.
தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக்குவேன் என பொதுவெளியில் கூறினேன். கற்பனையில் நினைக்காத அளவுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் உறுதியளித்தேன். அதன்படி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு, தீவிரவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025