மிகுந்த மனவேதனை! அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார் புதுச்சேரி ஆளுநர்!

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து என ஆளுநர் அறிவிப்பு.
ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்றே தெரியாமல் ஒரே இரவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 900 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த ரயில் விபத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மறுபக்கம், மத்திய பாஜக மற்றும் மாநில அரசிகள் இன்று ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தை அடுத்து புதுச்சேரியில் தான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார் தமிழிசை சவுந்தரராஜன். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், இரயில்வே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி அரசு சார்பில் மாஹேவில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு இரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
விபத்து நடந்த உடனே இரயில்வே துறையுடன் இணைந்து மீட்பு பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்கள், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்ததானம் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வரும் ஒடிசா மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்.. வணக்கங்களும்.. தழைக்கட்டும் மனிதநேயம் என தெரிவித்துள்ளார்.