என்சிபி கட்சியின் பெயர், சின்னத்திற்கு உரிமை கோரி மனு… முதலமைச்சராக விரும்புவதாக அஜித் பவார் பேச்சு!

சரத் பவார் அரசியலில் இருந்து விலகி எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பேச்சு.
மகாராஷ்டிரா அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்தது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். பாஜக கூட்டணியில் இணைந்த அஜித்பவார் துணை முதலைவராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
என்சிபி கட்சியில் மொத்தமுள்ள 53 எம்எல்ஏக்களில் 40 பேர் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக அஜித் பவார் கூறியிருந்த நிலையில், யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில், அஜித் பவார் மற்றும் சரத்பவார் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னத்திற்கு உரிமை கோரி அஜித் பவார் தரப்பு அளித்த மனு தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சரத் பவார் தரப்பு அளித்த மனுவும் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று பாந்த்ரா-வில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அஜித் பவார், தனக்கு ஆதரவாக 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், மேலும் சில எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்களின் நலனுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிரா முதலமைச்சராக விரும்புகிறேன். சரத் பவார் தான் தனக்கு ஹீரோ, இதனால் சரத் பவார் அரசியலில் இருந்து விலகி எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும். உங்கள் மீது எங்களுக்கு பெரும் மரியாதை உள்ளது என கூறிய அஜித் பவார், வரும் சட்டமன்ற தேர்தலில் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும் கூறியுள்ளார்.