‘மறைந்தது சகாப்தம்’! ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி!
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
மும்பை : பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று இரவு உடல்நலக் கோளாறால் உயிரிழந்தார். அவரது இழப்பு இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் வாழ்நாளில் அந்த அளவிற்கு சாதனையையும், மனிதநேயம் மிக்க மனிதராகவும் செயல்பட்டிருக்கிறார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை அவரது உடலை கொலாபாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்கள்.
பின் அங்கிருந்து மும்பையில் உள்ள நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின் இன்று மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் அங்கு வைக்கப்பட்டது. மேலும், ரத்தன் டாடாவின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து, அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் நேரில் சென்று நேரில் சென்று ரத்தன் டாடாவிற்கு இரங்கல் தெரிவித்தனர். 4 மணி அளவில் ரத்தன் டாட்டாவின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கட்டிருந்தது.
அதன்படி, மாலை 4 மணியளவில் அங்கிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்று. ரத்தன் டாடாவின் உடல் மும்பை ஒர்லியில் உள்ள பார்சி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மராட்டிய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பின், காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின், ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. ரத்தன் டாடாவுக்கு இறுதி சடங்கு நடைபெறும் இடத்தில் பல்லாயிரம் மக்கள் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.