மகாராஷ்டிரா: நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 13-ஆக உயர்வு! 100 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலச்சரிவில் 100 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ராய்கட் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கும் பகுதியான இர்சல்வாடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தன பெரும் விபத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வந்தனர். ராய்காட்டில் நிலச்சரிவில் ஏற்பட்டதை தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். NDRF தலைமையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறிய நிலையில், இப்பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கிராமத்தில் சுமார் 50 வீடுகள் உள்ளன.
அதில் 17 வீடுகள் நிலச்சரிவின் கீழ் புதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆகா உயர்ந்துள்ளது, இடிபாடுகளுக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் கூறப்படுகிறது.