நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
தமிழ்நாட்டில் அம்ருத் பாரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை காணொலி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்த 103 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறைகள், சுத்தமான குடிநீர் வசதிகள், நவீன கழிப்பறைகள் மற்றும் லிஃப்ட்/எஸ்கலேட்டர் வசதிகள்.இலவச வை-ஃபை, உணவு விடுதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் ரேம்ப்கள், பிரெய்லி குறியீடுகள் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள்.உள்ளிட்ட பல விஷயங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டம், பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதோடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பயண அனுபவத்தை மேலும் சிறப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அம்ரித் பாரத் நிலையத் திட்டம், இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன. இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முதல் கட்டமாக 103 நிலையங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு தயாராக உள்ளன. இந்த நிலையங்கள் 18 மாநிலங்கள் மற்றும் 86 மாவட்டங்களில் அமைந்துள்ளன.
பிரதமர் மோடி இன்று காலை 11:30 மணியளவில் ராஜஸ்தானின் பிகானரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில், 103 ரயில் நிலையங்களை திறப்பதோடு, ரூ.26,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், தொடங்கி வைக்கவும் உள்ளார்.