அன்று ஒரு அண்ணா ! இன்று அண்ணாவின் தம்பி தங்கைகள் 37 பேர் !

நாடாளுமன்றத்தில் நேற்று தமிழக எம்.பி க்கள் அனைவரும் தமிழிலே பதவி ஏற்றது ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது.பதவி ஏற்ற உரையின் முடிவில் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க கருணாநிதி வாழ்க,அம்பேத்கார் வாழ்க, தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக, திராவிடம் ஓங்குக என்று எதிரொலித்த அனைத்து வார்த்தைகளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவே அமைந்தது.
இந்த நிகழ்வுகளை பார்க்கும் பொழுது 1962 ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து திராவிட இயக்கம் சார்பில் மாநிலங்களவைக்கு அறிஞர் அண்ணா மட்டுமே தனி ஒரு ஆளாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், இன்றைக்கு அண்ணாவின் தம்பி தங்கைகளாய் 37 பேர் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அன்றைக்கு அண்ணா அவர்கள் எண்ணிக்கை என்பது பெரியது அல்ல,எண்ணமே பெரியது என்று கூறினார்.மேலும் அவர் பேசிய முதல் உரையான “I BELONG TO THE DRAVIDIAN STOCK” என்ற வார்த்தை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அதே போல, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் 303 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் இருக்கும் பாஜக வை வெறும் 37 பேர் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலாக நேற்றைய உரை இருந்தது. இவர்கள் சாதிக்க நினைக்கும் செயல்கள் பெரும் சவாலாக அமையும். தமிழக மக்களின் உரிமைக்காக இவர்கள் அனைவரும் ஒன்றிணைத்து உறுதியுடன் பாசிசத்திற்கு எதிராக போராட வேண்டியிருக்கும்.