ஒட்டுமொத்த இந்தியாவுமே பிரதமர் மோடியின் வீடுதான் – அதிமுக எம்.பி தம்பிதுரை

ஒட்டுமொத்த இந்தியாவுமே பிரதமர் மோடியின் குடும்பம்தான், இந்தியா முழுவதுமே அவரது வீடுதான் என்று அடுத்த முறை பிரதமர் மோடி தனது வீட்டில் தான் கொடியேற்றுவார் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சுக்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை பதில் அளித்தார். இதுதொடர்பாக தம்பிதுரை கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட குடும்பம் என்று எதுவுமில்லை, இந்தியா நாடே அவரது குடும்பம்.
செங்கோட்டை பிரதமர் மோடியின் வீடு, அதனால் அடுத்து ஆண்டும் அவர் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுவார். எனவே கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார் என்றார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தனிப்பட்ட குடும்பம் இருக்கிறது, அதனால் அவர் குடும்ப அரசியல் செய்கிறார் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் நாட்டுக்கு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பிரதமர் கூறுகையில், இந்திய மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். கடந்த முறை இந்திய மக்கள் வலுவான, பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுத்தனர். எனவே, அடுத்த முறையும் தேசியக்கொடி ஏற்றும்போது, பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பேசுவேன் என்றார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், பிரதமர் மோடியின் பேச்சு ஆணவத்தை காட்டுகிறது. அடுத்த முறையை தேசியக்கொடியை ஏற்றுவார், ஆனால் அதனை அவரது வீட்டில் தான் ஏற்றுவார் என விமர்சித்திருந்தார். இந்த நிலையில் கார்கே பேச்சுக்கு பதில் தரும் வகையில், ஒட்டுமொத்த இந்தியாவுமே மோடியின் வீடுதான் என்றும் அடுத்த முறையும் மோடி கொடியேற்றுவார் எனவும் அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.