நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!
தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது.

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட வரைவு விதிமுறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்களைப் பெற்ற பிறகு, சில மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
சமீபத்தில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில், இந்த விதிமுறைளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் எனவும் புதிய விதிமுறைகளை கள அளவில் செயல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும். அதனால் ஜனவரி 1, 2026 முதல் இந்த விதிமுறைகளை செயல்படுத்தலாம் எனவும் மத்திய நிதி அமைச்சம் பரிந்துரை செய்திருந்தது.
முன்னதாக, இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, “மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே விதிமுறைகள் இறுதி செய்யப்படும்” என்று நேற்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும், நகைக்கான ரசீது தேவையில்லை. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கட்டண மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும். ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை உள்பட புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. இதனை தொடர்ந்து, நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
தங்க நகைக்கடன் விதிகளை திரும்ப பெற்ற ரிசர்வ் வங்கியின் புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகள் என்னென்ன? என்பதை சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் விவரித்துள்ளார்.
1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.
2. ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.
3. 2024 செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும்.
4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.
5. நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப் படியே கடன் வாங்குபவர்கள் “இந்த நகை என்னுடையது தான்” என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.
6. ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.
7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.
8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.
9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.
10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும்- குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும்.