திமுக நிர்வாகி புகார்.., முதல்வர் பதிலளிக்க நோட்டீஸ்..!

கோவை திமுக நிர்வாகி சூலூர் ஏ. ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை திமுக நிர்வாகி சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் வாய்மொழி புகார் அளித்தார். இதுகுறித்து சூலூர் ஏ. ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் கூறுகையில், தான் உள்நோக்குடன்நடந்துகொள்ளவில்லை. நீரழிவு பிரச்சினை காரணமாக அவசரமாக இறங்கியதால் இந்த சம்பவம் நடந்ததாக அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார். பின்னர் அந்த பெண் சூலூர் ராஜேந்திரன் மீதான புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ரயில் பயணத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேர்தல் பரப்புரையில் தன்னைப்பற்றி அவதூறாக பேசியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிராக சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.