ராமேஸ்வரம் வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வந்தடைந்தார்.
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று தொடங்குகிறார்.
தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார். இந்த 6 மாத கால நடைபயணத்தின் போது பாஜக தேசியத் தலைவர்கள் பலரும், அண்ணாமலையுடன் கலந்து கொள்ள உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, அண்ணாமலையின் நடை பயணத்தைத் தொடங்கி வைப்பதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அமித்ஷாவுக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையைத் தொடக்கி வைப்பதற்காக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார்.