மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடியினப் பெண்கள் அல்ல, பாரதத்தாய்- சீமான் காட்டம்.!

மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடியினப் பெண்கள் அல்ல, நம் பாரதத் தாய் தான் என சீமான் கண்டனம்.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் வன்முறை சம்பவத்தின் எல்லை தாண்டலாக நேற்று இணையத்தில் வெளியான வீடியோ, நாட்டையே உலுக்கியது, இந்த வீடியோவில் மணிப்பூர் கலவரத்தின் போது கலவரக்காரர்கள் சிலர் 2 பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச்செல்வது போன்று வெளியான சம்பவம் குறித்து பலரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மணிப்பூரின் பழங்குடியின பெண்களுக்கு எதிரான இந்த அநீதியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பழங்குடியின பெண்ணை நாட்டின் உயர் பதவியில் உட்காரவைத்ததை பெருமை பேசும் பாஜக அரசு மணிப்பூர் சம்பவத்திற்கு என்ன பதில் கூறப்போகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகள் முதல் மணிப்பூர் பழங்குடியினப் பெண்கள் வரை பாஜக ஆட்சியின் கீழ், பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளாவது, உலகில் இந்தியாவிற்கு தலைகுனிவு என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடியின பெண்கள் அல்ல நம் பாரதத் தாய் என்று சீமான் கூறியுள்ளார்.
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு நடந்து வரும் தொடர் வன்முறை சம்பவத்தை, கட்டுப்படுத்த அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.