செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

SenthilBalaji SCourt Case

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி தொடர்பான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு இறுதி விசாரணையை நிறைவு செய்ய கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார் மீதான இறுதி விசாரணையை முடிக்க, மேலும் 6 மாதம் கூடுதல் அவகாசம் கோரி தமிழ்நாடு மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, செந்தில் பாலாஜி மீதான குற்றப்பிரிவு வழக்கில் தமிழக டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, சம்மன் அனுப்பியது.  மேலும், இவ்வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், எவ்வளவு நாள் அவகாசம் வேண்டும் என்பதை அதிகாரிகள் நேரில் வந்து கேட்கட்டும்.

6 மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது, குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும். உங்களுக்கு பிரச்சனை என்பது எப்போது இருந்துகொண்டே தான் இருக்கும். எனவே, உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிப்போம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள், 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் கூட இழுத்தடிப்பீர்கள், அரசுகள் எப்படி செயல்படும் என்பது தெரியும் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். செந்தில் பாலாஜி வழக்கில் பலரிடம் வாக்குமூலங்கள் பெறுவது கடினமான பணி என்பதால் கூடுதல் அவகாசம் தேவை என குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பான வழக்கில் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில், மேலும் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதில், தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை கேட்கட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகாரை தமிழக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்