மாநிலங்களவையில் தொடர் அமளி.. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் இந்த கூட்டம் நிறைவு பெறுகிறது.
கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை சம்பவம் பற்றி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி டெரிக் ஓ பிரையன் தொடர் அமளியில் ஈடுபட்டு, தனது இருக்கையை விட்டு வெளியே வந்து ஆவேசமாக தனது கருத்துக்களை முன் வைத்தார்.
இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் தொடர்ந்து வலியுறுத்தியும். திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி டெரிக் ஓ பிரையன் தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கான தீர்மானத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்வைத்தார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி டெரிக் ஓ பிரையன் இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது.
ஏற்கனவே, தொடர் அமளியில் ஈடுப்பட்டதாலும், அவை விதிமுறைகள் மீறி செயல்பட்டதாகவும் கூறி ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.