15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

2023ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதில், பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கூடுதல் டிஐஜி வெங்கட்ராமன், சென்னை வடக்கு காவல் ஆணையர் அஸ்ரா கர்க், காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திரன், கூடுதல் துணை ஆணையர் ஷாஜிதா, டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் உதவி ஆணையர் அனில்குமார், சூலூர், பீளமேடு ஆய்வாளர் மாதையன், அமுதா, மதுரை டிஎஸ்பி சரவணன், மாசார்பட்டி, மானாமதுரை, அரியலூர், திருப்பூர் ஆய்வாளர்கள் அனிதா, விஜயா, மகாலட்சுமி, சித்ராதேவி உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் மணிமேகலை, மறைந்த காவல் ஆய்வாளர் கு.சிவாவுக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 8 கிராம் எடையுடைய தங்கப்பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசு வழங்குகிறார் முதலமைச்சர்.