நடப்பு நிதியாண்டில் 9 ராக்கெட்கள் ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!

நாசாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள `ப்ளூபேர்டு பிளாக்-2' செயற்கைகோள் விரைவில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ISRO

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இஸ்ரோவின் வரவிருக்கும் திட்டங்கள் மற்றும் முக்கிய செயற்கைக்கோள் ஏவுதல்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

நாராயணன் கூறுகையில், “நடப்பு நிதியாண்டில் 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இவற்றில் புவி கண்காணிப்பு, தொலைத்தொடர்பு, மற்றும் அறிவியல் ஆய்வு செயற்கைக்கோள்கள் அடங்கும். இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏவுதல்கள் இந்தியாவின் விண்வெளி ஆய்வு திறனை மேலும் வலுப்படுத்தும்.” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘ப்ளூபேர்டு பிளாக்-2’ செயற்கைக்கோள், அடுத்த சில வாரங்களில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக நாராயணன் தெரிவித்தார். “இந்த செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு மற்றும் காலநிலை மாற்ற ஆய்வுகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். இதில் உள்ள எஸ்-பேண்ட் மற்றும் எல்-பேண்ட் ரேடார் தொழில்நுட்பங்கள், பூமியில் ஒரு சென்டிமீட்டர் நகர்வைக் கூட துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்டவை,” என்று அவர் விளக்கினார்.

அதனைத்தொடர்ந்து இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டம் குறித்து பேசிய நாராயணன், “2027-ல் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன், மூன்று ஆளில்லா விண்கலங்களை சோதனை செய்ய வேண்டும். முதல் ஆளில்லா விண்கலம், இந்த ஆண்டு டிசம்பரில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும். இதில் ‘வியோம்மித்ரா’ என்ற பெண் உருவ ரோபோ அனுப்பப்படும், இது மனிதர்களின் உடல் செயல்பாடுகளை பிரதிபலிக்கவும், விண்கலத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளை சோதிக்கவும் உதவும்,” என்றார்.

மேலும், சந்திரயான்-4 திட்டம் 2027-ல் நிலவில் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்கு தயாராகி வருவதாகவும், சந்திரயான்-5 திட்டம் ஜப்பானுடன் இணைந்து 2028-ல் 100 நாட்கள் நிலவு ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நாராயணன் குறிப்பிட்டார். “தற்போது 55 செயற்கைக்கோள்கள் விண்ணில் செயல்படுகின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இதை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

நாராயணன் மேலும் கூறுகையில், “இஸ்ரோவின் சமீபத்திய தோல்வி குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பார்கள். இந்திய விண்வெளி ஆய்வு, தோல்விகளில் இருந்து கற்று முன்னேறுவதற்கு உறுதியாக உள்ளது.” இந்தியாவின் விண்வெளி துறையை வளர்ச்சியடைந்த நாடுகளின் அளவுக்கு உயர்த்துவதற்கு தனது குழு முழு முயற்சியுடன் செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்