ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!
IT ஊழியர் கவின் ஆணவக் கொலை விவகாரம் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது 27) கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி மாநகரில், பாளையங்கோட்டை பகுதியில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கவின், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை (நெல்லை கே.டி.சி. நகரில் சித்த மருத்துவராக பணிபுரியும்) காதலித்து வந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆணவக் கொலை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. முதன்மைக் குற்றவாளியாக சுர்ஜித் (வயது 24), கைது செய்யப்பட்டார். இவர் கவின் காதலித்த பெண்ணின் சகோதரர்.
சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி, தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக (SI) பணிபுரிகின்றனர். இவர்கள் கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய, தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், இந்த வழக்கு நேற்றைய தினம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும், விசாரணையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, முன்னதாக, குற்றவாளியின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தற்பொழுது, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, காவல்துறை இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது. சிபிசிஐடி, இன்று முதல் விசாரணையை தொடங்கியது. நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி காவல் ஆணையர் சுரேஷ் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
காவல்துறையினர், வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், இருசக்கர வாகனம், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.