பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ஏற்கனவே, பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பதற்கு முன்பே நேற்று காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சரை சந்தித்து ஓபிஎஸ் நலம் விசாரித்திருந்தார். அதனைத்தொடர்ந்து மாலை நேரடியாக அவருடைய வீட்டிற்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு திடீரென சென்ற ஓபிஎஸ்-ஐ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசல்வரை சென்று வரவேற்றார். அரை மணி நேர சந்திப்பிற்கு பின் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து ஓ.பி.எஸ் புறப்பட்டார். முதலமைச்சரை ஸ்டாலின் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் ”முதலமைச்சரின் உடல்நலம் பற்றி விசாரிக்க, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். திமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ”அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்தகால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என பதில் அளித்திருந்தார்.
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரிடமும் இந்த சந்திப்பு பற்றியும்..பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விகள் கேட்கப்பட்டது. அப்படி தனியார் ஊடகம் ஒன்று சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ” நான் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். என்ன நோக்கத்தில் ஓபிஎஸ் முதல்வரை சந்தித்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர் மற்ற கட்சிகள் கூட்டணிக்குள் வரும் என்று நினைக்கிறீர்களா? என செய்தியாளர் கேள்வி எழுப்ப அதற்கு பதில் கூறிய திருமாவளவன் ” கூட்டணி குறித்து தலைவர் தான் பேசுவார். ஆனால், திமுக கூட்டணி வலுப்பெறுகிறது என்றால் அது எங்களுக்கு மகிழ்ச்சி தான்” எனவும் தெரிவித்தார்.