ரூ.2,500 வழங்குவது என்ற அறிவிப்பு தேர்தல் பொங்கலாக இருக்கும்- சீமான்

பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ 2,500 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,தேர்தல் பொங்கலாக இருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கினார்.அந்த வகையில் சேலத்தில் இருப்பாளி என்ற பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ,ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு,திராட்சை,வெல்லம்,முந்திரி,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார்.ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
இதனிடையே நேற்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் அதை மனதில் வைத்து பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ 2,500 அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஆகவே தேர்தல் பொங்கலாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார். இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.