#Breaking:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – முதல்வர் சார்பில் அசத்தலான பரிசு!

மதுரை:உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.இதனையடுத்து,ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
700 காளைகள்,300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்,முனியாண்டி கோயில் காளை உள்ளிட்ட கிராம கோயில் காளைகள் வடிவாசலில் முதலில் அவிழ்த்து விடப்பட்டதையடுத்து , போட்டி நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சார்பில் ஒரு சொகுசு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.மேலும்,இப்போட்டியில் வெல்லும் சிறந்த மாடுபிடி வீரருக்கு எம்எல்ஏ உதயநிதி அவர்கள் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.குறிப்பாக,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள்,மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக,ஜல்லிக்கட்டு போட்டியைக் காண 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே சமயம்,போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள்,போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.