‘இந்திரன் மாறினாலும் இந்திராணி மாறமாட்டார்’ – ஈபிஎஸ் அறிக்கை

ADMK Chief Secretary Edapadi Palanisamy

திமுக அரசின் அராஜக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு கடும் கண்டனம் என ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘இந்திரன் மாறினாலும், இந்திராணி மாறமாட்டார்” என்ற சொலவடைக்கு கட்டியம் கூறுவது போல், தமிழகத்தில் காவல் துறைத் தலைவர்தான் மாறி இருக்கிறாரே தவிர, ஒருசில காவலர்களின் அராஜகப் போக்கு இன்னும் மாறவில்லை. காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், ஊழல் செய்து கைதாகும் தனது அமைச்சர்களைக் காப்பாற்றும் வேலையில்தான் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளாரே தவிர, தமிழக போலீசார் எப்படி பணியாற்றுகிறார்கள் என்றே கவனிப்பதில்லை போலும்.

குற்றம் செய்தவர்களை கண்டுபிடிப்பதும், அவர்கள் மீது முறையாக வழக்கு தொடர்வதும், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தருவதும், குற்றவாளிகளை திருத்துவதும்தான் போலீசாரின் கடமை. ஆனால், இந்த விடியா திமுக அரசில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காவலர்களே நீதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, காவல் ஒருசில நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் அவலம் நடந்து வருகிறது. இதுவரை சுமார் 20 பேர் காவல் நிலையங்களில் சந்தேகமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள்.

இவர்களுடைய மரணத்திற்கு போலீசார்தான் காரணம் என்று அவர்களுடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது போல, உடல்நலக்குறைவால், நெஞ்சு வலியால் இறந்தார் என்று ஒரே பல்லவியை பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த ஆட்சியாளர்களின் அரட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிந்து செயல்படும் ஒருசில காவல் துறையினர் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதை இனியும் ஏற்க முடியாது. உயிரிழந்த வேடன் மீது எந்தவித வழக்கும், எந்தஒரு காவல் நிலையத்திலும் இல்லை என்று அவரது குடும்பத்தினரால் சொல்லப்படுகிறது.

என்ன காரணத்திற்காக வேடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை சம்பந்தப்பட்ட போலீசார் கூறவில்லை. எந்தக் குற்றமும் செய்யாத அவரை, எதற்காக மறுநாள் அதிகாலைவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார் என்பது புரியவில்லை. இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 26 மாதங்களில் சுமார் 20 காவல் நிலைய மர்ம மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

அப்பாவி வேடனின் காவல் நிலைய சந்தேக மரணத்திற்கு இந்த விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்க வேண்டும். இந்த மர்ம மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி, யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேடன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்