இந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது – கே.எஸ்.அழகிரி ட்வீட்
ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி நடந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது என கே.எஸ்.அழகிரி ட்வீட்.
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அமிலநாடு காங்கிரஸ் கமிட்டிங் தலைவர் கே.எஸ்.அழகிரி அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசாவில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் 250-க்கும் மேற்பட்டோர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இதில் சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலியான செய்தி மேலும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சம்பவம் நடைபெற்ற உடனே தமிழக முதலமைச்சர் சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியதோடு, விபத்து நடந்த இடத்திற்கு தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோரை அனுப்பி நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார். கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் நேரில் சென்று நிவாரணப் பணிகளை கண்காணித்ததோடு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார்.
ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி நடந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. கடந்த சில ஆண்டுகளாகவே ரயில் விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் விபத்து எண்ணிக்கை 2014-15 இல் 135, 2015-16 இல் 107, 2017-18 இல் 73 என விபத்துகள் நிகழ்ந்து வருவது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துகிறது. 2014 முதல் மூன்று ஆண்டுகளில் 27 ரயில் விபத்துகளில் 259 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
இத்தகைய விபத்துகளுக்கும், மரணங்களுக்கும் யார் பொறுப்பு ? புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில் என கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிற பா.ஜ.க. அரசு, ரயில் விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ரூபாய் 40,000 கோடி நிதியை ஏன் ஒதுக்கவில்லை ? ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்திற்கு யார் பொறுப்பு ? 1956 ஆம் ஆண்டு அரியலூரில் ரயில் விபத்து ஏற்பட்ட போது அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகிய முன்னுதாரணத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அதைப்போல, ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்திற்கும் இன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த ரயில் விபத்திற்கு உரிய பொறுப்பை ஏற்கிற வகையில் அவர் பதவி விலகுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ஒடிசா ரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி மரணமடைந்தவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இழப்பீட்டுத் தொகையை வழங்குவதனால் இறந்த உயிர்கள் மீண்டு வரப் போவதில்லை என்றாலும் ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்தை படிப்பினையாக ஏற்று, இனி ரயில் விபத்துகள் நடக்காமல் தடுக்க ரயில்வே அமைச்சகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதில் காட்டுகிற ஆர்வத்தை ரயில்வே பாதுகாப்பில் காட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் 250-க்கும் மேற்பட்டோர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இதில் சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலியான செய்தி மேலும்… pic.twitter.com/AoPOfTrYf5
— K.S.ALAGIRI (@KS_Alagiri) June 3, 2023