ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
தாய்லாந்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தடகள வீரர்கள் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இந்த நிலையில், தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. நீளம் தாண்டுதல் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். நீளம் தாண்டுதலின் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் முரளி ஸ்ரீசங்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதுபோன்று உயரம் தாண்டுதல் போட்டியில் 2.26 மீட்டர் தாண்டி சர்வேஷ் குஷாரே வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதனிடையே, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 49.09 நொடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் தமிழரசன்.
48.64 நொடிகளில் கத்தார் வீரரும், 48.96 நொடிகளில் ஜப்பான் வீரரும், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தட்டிச் சென்றனர். எனவே, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் 5 தங்கம், 3 வெள்ளி உட்பட 12 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.