AsianGames2023: 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்று இந்திய வீராங்கனை ஈஷா சிங் அசத்தல்..!

இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி எண்ணற்ற பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அதன்படி, 18 வயதான ஈஷா சிங் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் 34 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் வெள்ளிப் பதக்கத்தில் ஒன்று கூடியுள்ளது. சீனாவின் ரூய் 38 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். கொரியாவின் யாங் ஜியின் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
அதோடு, இந்தியாவின் மனு பார்கர் 5 வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்னதாக 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவை சேர்ந்த மனு பார்கர், ஈஷா சிங், ரிதிம் சங்வான் ஆகியோர் அடங்கிய துப்பாக்கி சுடுதல் அணி 1,759 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
மேலும், இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 21 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. அதேபோல, சீனா 65 தங்கம், 35 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களுடன் 114 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.