BCCI – PCB : பாகிஸ்தானில் எங்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது.! பிசிசிஐ தலைவர் நெகிழ்ச்சி.!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஐசிசி கோப்பை தொடர்கள் , ஆசிய கோப்பை தொடர்களை தவிர்த்து இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் சுற்று பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் போன்ற போட்டி தொடர்களில் சமீபத்திய ஆண்டுகளில் பங்கேற்கவேயில்லை. கடைசியாக 2012இல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்ததே சர்வதேச தொடர்களை தவிர்த்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி தொடராகும்.
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வரவுள்ளது. அதற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாட்டு அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச கிரிக்கெட் அணியும் மோதின. இந்த போட்டியை நேற்று லாகூர் மைதானத்தில் வைத்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.
சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பின் பெயரில் அங்கு சென்று கிரிக்கெட் போட்டியை கண்ட பிறகு பேசிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி, பாகிஸ்தானில் எங்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது.
நல்ல விருந்தோம்பல் அளிக்கப்பட்டது. எங்களை சிறப்பாக நடத்தினர். பாகிஸ்தானுடன் நேரடி இருநாட்டு தொடர் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது தீர்மானிக்க முடியாது. இந்த விஷயத்தில் தீர்மானிக்க வேண்டியது இரு நாட்டு அரசுகளும் தான் என பாகிஸ்தான் சென்று திரும்பிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025