ஒருநாள் உலகக் கோப்பை! 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் கால் பதித்த பாகிஸ்தான் அணி!

PAKISTHAN CRICKET TEAM

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கால் பதித்த பாகிஸ்தான் அணி, தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளது. அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்.5ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடர் நவ.19ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை இந்தியாவில் நடைபெறுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணிகளும் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர். அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

எனவே, உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், ஒவ்வொரு அணியாக இந்தியாவுக்கு வருகை தந்து, பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், பாபர் ஆசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்தாண்டு உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளுமா? என சந்தேகம் இருந்த நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தை பல்வேறு நடவடிக்கை மூலம் இந்தியா வர ஒப்புக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து தான், உலககோப்பையில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் அணி வெளியிட்டது. இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்தடைந்தது. அதாவது, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கால் பதித்துள்ளது பாகிஸ்தான் அணி. கடைசியாக 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடியது. இதன்பிறகு, இருநாட்டு விவகாரம், தாக்குதல், அரசியல் பிரச்சனை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

தற்போது உலகக்கோப்பையில் பங்கேற்க இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம். இந்தியாவில் கிடைத்த வரவேற்பு குறித்து பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், ரிஸ்வான் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தியா வந்தடைந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் அணி ஐதராபாத் வந்தடைந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வருகையை ஒட்டி ஹைதராபாத் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது, பாகிஸ்தான் வீரர்களை இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில், இந்தியா வந்துள்ள கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் நாளை நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட உள்ளது. பாகிஸ்தான் தனது 2வது உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல முனைப்பில் உள்ளது. ஹைதராபாத்தில் வரும் 29ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்.14ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (c), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது அப்ரிடி வாசிம் ஆகியோர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்