”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!
ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அன்புமணி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் தொடங்கியது. முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் நிறுவனர் இராமதாஸுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் என மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக நிர்வாகக் குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடிவேல் ராவணன், திலகபாமா, பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்புமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் “தேர்தல் ஆணையம் அங்கீகரித்த தலைவர் அன்புமணி பங்கேற்காத தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு கூட்டம் செல்லாது” என 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் சட்ட விதிகளுக்கு முரணானது. பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் அன்புமணியின் கரத்தினை வலுப்படுத்த துணை நிற்க வேண்டும்.
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் அன்புமணியின் கரத்தினை வலுப்படுத்த பாமக உறுதியேற்கிறது. வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஜூலை 20ம் தேதி அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.