பந்துவீச்சில் சுருண்ட மும்பை இந்தியன்ஸ்.. ஹைதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

ஹைதராபாத் அணிக்கு ரன்களை இலக்காக வைத்தது, மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஹைதராபாத் – மும்பை அணிகள் மோதி வருகின்றது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. வாழ்வா – சாவா எனும் எல்லையில் ஹைதராபாத் அணி இருக்கும் காரணத்தினால், இந்த போட்டி சிறப்பாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – டி காக் களமிறங்கினார்கள். இதில் 4 ரன்கள் மட்டுமே அடித்து ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த டி காக் 25 ரன்களில் வெளியேறினார். அதன்பின் சூரியகுமார் யாதவ் – இஷான் கிஷன் கூட்டணி களமிறங்கி சிறப்பாக ஆடிவந்தனர்.
இவர்களின் கூட்டணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 36 ரன்களில் சூரியகுமார் யாதவ் வெளியேற, அடுத்த களமிறங்கிய க்ருனால் பாண்டியா ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் அதிரடியாக ஆட, மத்தியில் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவரையடுத்து ஜேசன் ஹோல்டர் மற்றும் நதீம் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்கள்.